திருவள்ளூர்: கும்மிடிபூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவன பயிற்சி மையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், புதிய பணிமனைக்கு இடம் தேர்வு செய்தல் ஆகியவற்றைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று(ஜூலை.13) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளைக் கூடுதலாக இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பெட்ரோல் டீசல் உயர்வால் பயணிகளின் பயண சீட்டு விலை உயராது. ஆனால், வருங்காலத்தில் அது குறித்து முடிவு செய்யப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் பணிநிரந்தரம் பொறுத்தவரையில் 7,000 பணியிடங்கள் காலியாக உள்ளது. புதிய பணியாளர்கள் சேர்க்க உள்ளனர். கரோனாவுக்கு முன்பு ஒரு கோடியே 60 லட்சம் பயணிகள் பயணம் செய்த நிலையில், தற்போது அது 90 லட்சமாகக் குறைந்துவிட்டது.
கும்மிடிப்பூண்டியில் உள்ள அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் திறந்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'முழுக்க முழுக்க அரசியல் நாடகம்' - நீட் தேர்வு பாதிப்பை ஆராயும் குழுவை விமர்சித்த கரு. நாகராஜன்