சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல், மாத்தூர் மாநகராட்சி மருத்துவமனைகள், சூரப்பட்டு தனியார் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "சூரப்பட்டில் தனியார் கல்லூரியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஒரு வார காலத்தில் 86 ஆக்ஸிஜன் உடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 850 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துள்ளார்.
தண்டனை, அபராதத்தை தாண்டி சுய உணர்வோடு இருந்தால் தான் முழு ஊரடங்கு வெற்றி பெறும். வடமாநிலங்களில் நிகழ்வது போல சென்னையில் சடலங்களை எரியூட்ட மயானங்களில் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏதும் இல்லை.
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது மனிதாபிமானமற்ற செயல். தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து முக்கிய நகரங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்தன் காரணமாகவே 419 டன் ஆக்ஸிஜன் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உலகளாவிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தயாராகி வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்த ஆலோசனை: ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்