கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழிலில் உள்ள அனைத்து துறைகளும் முடக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வெளிமாநில தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் பணியையும் தொடங்க முடியாமல், சொந்த மாநிலத்துக்கு திரும்பிச் செல்லவும் முடியாத நிலையில் தவித்து வந்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று மாலை திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஒடிசா, பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் செலவில் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைத்தார்.
ரயில் நிலையத்தில் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை, முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டு ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு தேவையான பழம், ரொட்டி ஆகியவையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - நாளை ஆலோசனை!