திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரியபாளையம் அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில், ஒடிசாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் செங்கல் சூளையில் பணிகள் நிறுத்தப்பட்டன.
அப்படி பணிகள் நிறுத்தப்பட்டு 70 நாள்களுக்கும் மேல் ஆகியுள்ளதால், செங்கல் சூளையில் பணிபுரிந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் அனைவரும் தங்களது பொருள்களை மூட்டையாக கட்டிக்கொண்டு நேற்று (ஜூன் 8) இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்வதாகவும், அதுவரை இங்கேயே தங்கி இருக்குமாறும் அறிவுறுத்தினர். அதனையடுத்து தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு திரும்பினர்.
இதையும் படிங்க: அந்தமானில் சிக்கித்தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை மீட்ட ஒடிசா!