திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் தங்களின் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாததால், விஜயவாடா, அசாம், ஒடிசா போன்ற பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இதுவரை ஒரே இடத்தில் தங்கியிருந்தனர்.
தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின்பு, தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழக அரசு சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வாகன ஏற்பாடுகள் முறையாக செய்யாததால் அவர்கள் தற்போது வேறு வழியின்றி நடை பயணமாகவும், சைக்கிள் பயணமாகவும் கடந்த மூன்று தினங்களாகச் சென்று வருகின்றனர்.
குறைந்த விலைகளில் சைக்கிள்களை வாங்கிக்கொண்டு, அதில் தண்ணீர், துணி பைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுடன் அதிகாலையில் கிளம்புகின்றனர். இதனை ஆந்திர எல்லையில் கவனிக்கும் அம்மாநில காவல் துறையினர், சைக்கிளில் வரும் தொழிலாளர்களை அடித்து திருப்பி அனுப்புகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், அந்தந்த வட்டாட்சியர்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்மூலம் வட்டாட்சியர்கள் தங்களது பகுதியில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அங்கிருந்து பேருந்து மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
அங்கிருந்து அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் வகையில் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 30 நபர்கள் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்க சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. திருவள்ளூர் வட்டாட்சியர் ஜெயலக்ஷ்மி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வடமாநில தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.