திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஜமாத் கமிட்டி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கணி, மதரீதியாக அண்டை நாடுகளில் உள்ளவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது மதசார்பின்மையை குழிதோண்டி புதைப்பது போன்றது என்றும் இச்சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் அறவழியில் போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களிடம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் பெரிய குழப்பம் உள்ளதாகவும் இந்த தேர்தல் எப்படி நடந்தாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் பாலியல் வழக்குகளில் விரைந்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அதுவும் இனி குற்றங்கள் நடக்காத வண்ணம் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அதிமுக, தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து தமிழ்நாட்டின் நலன்களை காவு கொடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:
மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!