திருவள்ளூர்: சுப்பிரமணிய சாமி திருக்கோயில் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாள், ஆதலால் அன்றைய நாளில் உள்ளூர் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இவர்கள் 150 ரூபாய் கட்டணம் பாதையில் முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். இந்த வழிப்பாதையில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று புதிதாக துணை ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் விஜயா உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக நேற்று கோயிலுக்கு வந்த உள்ளூர் பக்தர்கள் யாரையும் ஊழியர்கள் அந்த பாதையில் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோயில் பணியாளர்களுக்கும் , உள்ளூர் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோயிலுக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் நிர்வாகத்திடம் பேசி உள்ளூர் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்துச்சென்றார்.
இதனிடையே மலைக்கோயிலில் மற்றொரு இடத்தில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி செல்லும் பகுதியில் பணியில் இருந்த கோயில் ஊழியர் புருஷோத்தமனிடம் உள்ளூர் பக்தர் லோகு என்பவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் தரிசனத்திற்கு உள்ளே அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.கட்டணம் செலுத்தினால் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று கோயில் ஊழியர் கூறியுள்ளார்.
இதனால் திருக்கோயில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவரும் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆடல் பாடலுடன் அமர்க்களம் - சிதம்பரத்தில் நடந்த சிவனடியார்கள் போராட்டம்