திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ஐயர் கண்டிகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு சொந்தமான திரைப்பட இசை ஒலிப்பதிவு கூடமும், நிகழ்ச்சி அரங்கமும் உள்ளது. தற்போது அங்கு புதிய திரைப்படம் ஒன்றின் பாடல், மற்றும் பின்னணி இசைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று(ஜன.18) அதிகாலை ஐந்து மணி அளவில் நிகழ்ச்சி அரங்கத்தில் மின்விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த குமார்(47) என்ற உதவி மின் பொறியாளர் (லைட் பாய்) 40 அடி உயரத்தில் ஏறி மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி உள்ளார்.
இது குறித்து அங்கிருந்த ஊழியர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த 108 அவசர ஊர்தி ஊழியர்கள் குமாரை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து இவ்விடத்திற்கு வந்த கவரப்பேட்டை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
40 அடி உயரத்தில் தலைக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்கப்படாதது உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உதவிக்கரம் நீக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தளபதி 67: விஜய்க்கு மகளாகும் "பிக் பாஸ் ஜனனி"!