திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். வாலிபால் வீரரான இவர், கடந்த 25ஆம் தேதி நேபாளம் நாட்டில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் பங்கேற்க சென்றார். அங்கு நேபாளத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நடந்த போட்டியில், முதல் சுற்றில் பங்கேற்று வெற்றி பெற்ற அவர், ஓய்வு எடுக்க சென்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கு ஆகாஷிர்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்தில் இருந்து, டெல்லி வழியாக, சென்னை விமான நிலையத்திற்கு நேற்று (டிசம்பர் 29) அவரது உடல் வந்தது. சென்னை விமான நிலையத்தில் ஆகாஷ் உடலுக்கு, அமைச்சர்கள் மஸ்தான், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை துணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து ஆகாஷின் உடல் ஆம்புலன்ஸ் மூலம், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் முன்னிலையில், கைவண்டூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் நாசர், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரன் மற்றும் வாலிபால் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் ஆகாஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து ஆகாஷின் உடலை அவரது இல்லத்தில் இருந்து சக வாலிபால் வீரர்கள் இறுதி ஊர்வலமாக இடுகாட்டிற்கு சுமந்து சென்று, அவர் உடல் மீது வாலிபால் வைத்து நல்லடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க: வீடியோ: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம்