திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதிக்குட்பட்ட ஆரணி ஆற்றை கடக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன. 60 விழுக்காடு மேம்பால பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தரைப்பாலம் தாற்காலிகமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் காரணமாக தொடர் மழையால் மாவட்டத்தில் ஏரி அணைகள் நிரம்பி வழிந்தன. இதனால் பிச்சாட்டூர் ஏரி தொடர்ந்து 2 முறை திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை ஆரணியாறு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டதுடன், ஒருவார கால அவகாசத்தில் இதற்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்து சென்றனர். எனினும் ஒரு மாத காலம் ஆகியும் இன்றுவரை இதற்குத் தீர்வு கிடைக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தங்களை ஏமாற்றி விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதோடு, முழுமையான பணிகள் நிறைவு பெறாத பாலம் மீது இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு அதனையே ஆற்றினை கடக்க அப்பகுதி பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் பள்ளி, மாணவ- மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செல்வதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் பொதுப்பணித்துறை அலுவலர்களின் அலட்சியத்தால் பெரும் இன்னல்களை சந்தித்து வரும் பொதுமக்கள் விரைவில் மேம்பால பணிகளை முடிக்காவிட்டால் மக்களை திரட்டி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: மாயமான மகள் பட்டதாரியாக மீண்ட அதிசயம் - காவல்துறையின் முயற்சியால் பெற்றோர் மகிழ்ச்சி