திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ளது நெமிலி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்தவர் சபாபதி. அவரின் மகன் பிரபாகரன். இவருக்கும் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த காயத்ரிக்கும் 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
திருமணம் முடிந்த பிறகும் மகன் தனிமையில் வாழ்வதைப் பார்த்த சபாபதி குடும்பத்தினர், பிரபாகரனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த காயத்திரி, தனது தாய் கலைவாணியுடன் நெமிலிக்குச் சென்று சபாபதியிடம், தனது கணவருக்கு திருமணம் செய்வது குறித்து கேட்டுள்ளார்.
ஆனால் சபாபதி சரியாக பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த காயத்ரி அவரை கொலை செய்ய, தனது தாயுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். வீட்டில் சபாபதி தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு தனது தாயுடன் சென்ற காயத்ரி, மண்ணெண்ணெய் ஊற்றி அவரை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், 70 சதவீகிதம் தீ காயங்களுடன் இருந்த சபாபதியை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீ காயங்கள் அதிகமாக இருந்ததால் தற்போது அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கனகம்மாள்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் காயத்திரி, அவரின் அம்மா கலைவாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.