திருவள்ளூர் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட்டில் பிளாஸ்டிக் மோல்டிங் செய்யும் தனியாருக்கு சொந்தமான கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியின் ஷெட்டர் பராமரிப்பு பணிக்காக அனகாபுத்தூரை சேர்ந்த அற்புத குமார் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த முருகன், நாகராஜ், ஆனந்த் ஆகிய 3 பேரை பணிக்கு அழைத்து வந்துள்ளார்.
இன்று (டிச.22) காலை மூன்று பேரும் சுமார் 20 அடி உயரம் கொண்ட இரும்பு ஏணியை கொண்டு ஷெட்டரை பராமரிப்பதற்காக வெளியே கொண்டுவந்தனர். அப்போது கம்பெனிக்கு வெளியே தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்சார வயரை கவனிக்காமல் சென்ற நிலையில், எதிர்பாராதவிதமாக மின்சார வயர் மீது இரும்பு ஏணி உரசியதில், மின்சாரம் பாய்ந்து மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் ஆனந்த் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் முருகன், நாகராஜ் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த குன்றத்தூர் காவதுறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இவர்கள் மூவரையும் வேலைக்கு அழைத்து வந்த அற்புதகுமார் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலையில் வேலைக்கு வந்தவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுடிவாக்கம் சிப்காட்டின் பல பகுதியில் தாழ்வாக மின்சார வயர்கள் செல்வதால் அடிக்கடி மின் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக ஊழியர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு