சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள சவிதா என்ற தனியார் மருத்துவமனையில் ரூ. 40 கோடி செலவில், 2 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரா மெடிக்கல் மருத்துவ கட்டடத்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ’என்னை மேதகு என கூறுவதைவிட பாசமிகு சகோதரி என கூறுவதே எனக்கு பெருமையாக உள்ளது. தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டத்திலிருந்து தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் பேசிய எனக்கு 20 நாட்கள் கழித்து தமிழ் பேச வைத்த நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளேன்.
பிரதமரின் மருத்துவ திட்டத்தில் இதுவரை 50கோடி பேர் இணைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்தத் திட்டத்தில் 46 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு 17,000கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கொடுத்த வேலையை சரியாக செய்ததால், சாதாரண பெண்மணி ஆளுநராக நிற்கிறேன். அதுபோல் நமது வேலைகளில் கவனம் செலுத்தினால் அனைத்தும் நம்மை தேடி வரும். சாதாரணமாக நடவேண்டிய மரம், இன்று இயக்கமாக மாறியுள்ளது. இதற்கு மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வுதான் காரணம்’ என்றார்.