திருவள்ளூர் மாவட்டத்திற்குள்பட்ட பொன்னேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் துரை சந்திரசேகரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலு மீஞ்சூர் பேரூராட்சிக்குள்பட்ட அரியன்வாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாக்குச் சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக்கும் இயக்கங்கள் காங்கிரஸ், திமுக என்னும் பேரியக்கங்கள். கருணாநிதி ஆட்சியில் இந்தியாவிலேயே மூன்றாம் இடத்திலிருந்த தமிழ்நாடு இன்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 19ஆம் இடத்திற்குச் சென்றுவிட்டது. ஆறு ஆண்டுகள் ஆட்சியில் உலகிலேயே பின்தங்கிய நாடாக இந்தியாவை மாற்றிவிட்டது பாஜக.
தமிழ்நாட்டில் மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் ஒரு லட்சம் கடன் சுமையை ஏற்றியதுதான் எடப்பாடி பழனிசாமியின் சாதனை. ஸ்டாலின், ராகுல் காந்தி இருவர்தான் மோடியையும் மக்களுக்கு எதிரானவர்களை எதிர்க்கும் இரண்டு துப்பாக்கிகளாக உள்ளார்கள்.
மோடிக்கும், எடப்பாடிக்கும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பும் இடமும் கிடைக்காது. தமிழ்நாட்டிற்கு மு.க. ஸ்டாலினும் இந்தியாவிற்கு ராகுல் காந்தியும்தான் சிறந்த தலைவர்கள்.
பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தமிழ்நாட்டில் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதால் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்" என்றார்.
வாக்குச் சேகரிப்பின்போது, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிதம்பரம், திமுக முன்னாள் அமைச்சர் கா. சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.