திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன. தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கிராம மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக ஆற்றை கடந்து சென்று வர வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் பள்ளிப்பட்டு அருகே வெங்கட்ராஜ்குப்பத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி நாதமுனி (32) என்ற இளைஞர் நேற்று மாலை வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு செல்ல கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கின் இடையில் நடந்து செல்லும்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரின் உடல் இன்று கரை ஒதுங்கியது.
இறந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக போலீசார் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையிலேயே கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ஓராண்டிற்குள் வைகை எழில்மிகு ஆறாக மாறும் - அமைச்சர் செல்லூர் ராஜு