குன்றத்தூரை அடுத்த கெலடிப்பேட்டை, அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் குன்றத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனது மகனின் திருமணத்திற்காக ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார்.
சமீபத்தில் தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்களிடம் புகார் அளித்ததையடுத்து, வங்கி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதே வங்கியில் உதவியாளராக வேலை செய்து வந்த பழனிவேல் என்பவர் பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்ததையடுத்து அவரை குன்றத்தூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போரூர் உதவி கமிஷனர் சம்பத் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஈஸ்வரியின் வங்கிக் கணக்கின் எண்ணை தெரிந்து வைத்துக்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சிறுக, சிறுக ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்தை பழனிவேல் எடுத்து கையாடல் செய்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குன்றத்தூர் காவல் துறையினர் பழனிவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்த பணத்தை வங்கி ஊழியரே கையாடல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்கூட்டிய வரி செலுத்த காலக்கெடு நீட்டிப்பு!