சென்னை மாதவரம் அருகே ரெட்டேரி ரவுண்டானாவில் எஸ்.ஆர். ரிக்கிரியேஷன் என்ற பெயரில் சூதாட்ட விடுதி இயங்கி வருகிறது. சட்டத்திற்குப் புறம்பாக இயங்கிவரும் இந்த விடுதி வளாகத்தில் 3 அட்டை, 13 அட்டை, 21 அட்டை என்று 1000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பந்தயம் வைத்து விளையாடுவதாகக் கூறப்படுகிறது.
சென்னை, ஆந்திராவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சூதாட்ட பிரியர்கள் வருவதாக கூறப்படுகிறது. பணம் வைத்து விளையாடுவது, பின்னர் அணிந்திருக்கும் தங்கநகை, அதுவும் தீர்ந்து போனால் வீடு, நிலம் பத்திரங்களை என்று அனைத்தையும் வைத்து விளையாடி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம்.
சட்டத்திற்குப் புறம்பாக இயங்கிவரும் இந்த சூதாட்ட விடுதியை அகற்ற வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என்று பெயர் சொல்லமுடியாத பலர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை சூதாட்ட விடுதியில் வேலைக்கு வந்த ஊழியர் சண்முகம் என்பவர், கீழ்த்தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மாதவரம் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து விசாரித்தபோது சண்முகம் தன்னிடம் இருந்த பணத்தை வைத்துச் சூதாடி தோற்றுவிட்டதாகவும், விடுதி உரிமையாளர்கள் சுரேஷ், ரமேஷ் இருவரிடம் வீட்டுச் செலவிற்குப் பணம் கேட்டும், அவர்கள் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.