திருவள்ளூர்: உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜான்சிக்கும் ஓம்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் கணவனுடன் சென்று அங்கேயே தங்கி குடும்பம் நடத்தி வந்தார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் அமெரிக்காவிலிருந்து மனைவியை விட்டு பிரிந்து சொந்த ஊர் திரும்பினார்.
விவாகரத்து கிடைக்காத விரக்தி
இவர்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஓம்குமார் விவாகரத்து கேட்டு பூந்தமல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல திருமண தகவல் மையத்தில் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டுமென பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் அவரது தந்தை செல்போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து ஜான்சியின் தந்தை பத்மநாபனுக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருவள்ளூரில் உள்ள சைபர் கிரைம் தடுப்பு பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் க்ரைம் தடுப்பு பிரிவு ஆய்வாளர் லில்லி, உதவி ஆய்வாளர் மனோஜ் பிரபாகர் தாஸ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம்குமார் தான் திருமண தகவல் மையத்தில் ஜான்சியின் பெயரை பதிவிட்டது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் ஓம்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பகையாளி வீட்டை மறந்து, பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு