தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிக்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில், பூந்தமல்லி தொகுதியும் அடங்கியுள்ளது. இதையொட்டி பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, 'வரும் தேர்தலில் மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்கை பதிவு செய்ய வேண்டும்' என பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணி, பூந்தமல்லி மற்றும் சாலை வழியாக சுமார் ஐந்து கிலோமீட்டர் சென்று நிறைவடைந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது: "திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 32 லட்சத்து 34 ஆயிரத்து 206 வாக்காளர்கள் உள்ளனர். மூவாயிரத்து 573 பழைய வாக்குச் சாவடிகள் உள்ளன. புதிதாக 55 வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தல் குறித்ததான புகார்களை 1950 என்ற எண்ணிலும், ஆப் (செல்போன் செயலி) மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம். தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க 30 பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் 10 வீடியோ பதிவோடு கண்காணிக்கக்கூடிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊடகங்களில் வரும் தேர்தல் சம்பந்தமான தகவல்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக துணை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடுதல் தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.