திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கோங்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமரன் (40), இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் மாதர்பாக்கம் நெடுஞ்சாலையில் வீட்டுடன் கூடிய மளிகை கடையை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை கடைக்குச் செல்வதற்காக கிளம்பிய குமரன் மனைவியை தேடி உள்ளார். அப்போது வீட்டிலேயே மயங்கிய நிலையில் இருந்த மனைவியை கண்ட குமரன் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அருகாமையில் உள்ளவர்கள் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டை கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் தேவி இறந்து விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து உறவினர்கள் தேவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதிரி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
மேலும் தேவி மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தாரா? அல்லது மின்சாரம் தாக்கி உயிர் இழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 100 யூனிட் இலவச மின்சாரத்தை 200 யூனிட் வரை நீட்டிக்க வேண்டும்... சமூக ஆர்வலர்கள் கோரிக்கை