திருவள்ளூர்: அழகான ஓவியங்கள் வாயிலாக மாணவர்களை ஈர்க்க நினைத்த அரசு ஆதிதிராவிடர் பள்ளி தலைமை ஆசிரியர், தன் சொந்த செலவில் அதற்கான ஏற்பாடுகளை செய்துவருவது பாராட்டை பெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் மிகவும் பழமையான வரலாறு கொண்ட அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தனது படிப்பினை தொடங்கிய ஆயிரக்கணக்கான மாணவர்கள், இன்று பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
தற்போது பள்ளி வளாகத்திலேயே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளதால் ஆண்டுதோறும் இங்கு சேர்க்கை விகிதம் அதிகரித்து வந்த நிலையில், கரோனா சூழலால் மாணவர் சேர்க்கை குறைந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கிய அரசு ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியர் ஜான்சன், தனது சொந்த செலவில் (சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில்) இயற்பியல், வேதியல், கணக்கு, ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த ஓவியங்களை அனைத்து வகுப்பறையிலும் வரையச் செய்து மாணவர்களை கவர்ந்துவருகிறார்.
இந்த அழகிய ஓவியங்களில் திருக்குறள், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், பூக்கள், காய்கறிகள், டோரா, சோட்டா பீம், டாம் அண்ட் ஜெர்ரி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், எளிய வழியில் ஆங்கிலம் பயில்வது குறித்த ஓவியங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள், மனித உடல் உறுப்புகள், தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்கள், திருவள்ளுவர் சிலை, விண்வெளி கோள்கள், தமிழ்நாடு வரைபடம், கணித குறியீடுகள், இந்திய வரைபடம், இந்தியாவின் மாநிலங்கள், தமிழ்நாடு மாவட்டங்கள், நல்ல தீய பழக்கவழக்கம், இந்தியாவின் பாதுகாப்பு குறித்த முப்படைகளின் வரைபடங்கள், இயற்கை காட்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி பயில ஏற்ற வரைபடங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜான்சன் கூறுகையில், 90 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்ட இந்தப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்கள் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.ஓவியங்கள் வாயிலாக மாணவர்களை ஈர்க்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்பொழுது தமிழ்நாடு அரசால் கரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, கூடிய விரைவில் பள்ளிகள் இயங்கும் என்ற நிலை நிலவி வருகிறது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும், அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதாலும், அவர்கள் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர்.எனவே மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக அவர்களை கவரும் வண்ணம், பாடங்கள் சம்பந்தப்பட்ட வரைபடங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவை வரையப்பட்டுள்ளன. ஓவியங்கள் அடிப்படையில் பாடங்களை மாணவர்கள் கற்பதனால் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.தனியார் பள்ளிகளுக்கு எந்த விதத்திலும் அரசு பள்ளிகள் குறைந்தவை கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு அரசுப் பள்ளி தலைமையாசிரியர் செயல்பட்டு வருவது சமூக ஆர்வலர்களிடமும், அப்பகுதி மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரையை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!