திருவள்ளூர்: தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து வைத்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க பொதுமக்கள் அரசு அலுவலர்களிடத்தில் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு கட்டடம் கட்டுவதற்காக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தனியாருக்கு சொந்தமான மடம் ஒன்று அதனை ஆக்கிரமித்து, தனது மடத்திற்கான சுற்றுச்சுவரை அமைத்தது.
இது குறித்து மெய்யூர் ஊராட்சி பொதுமக்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோரிடத்தில் மனு கொடுத்தனர். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர், அரசு நிலத்தில் தனியாரால் எழுப்பப்பட்ட சுற்றுச்சுவரை அகற்றுவதற்கான ஆணையை பிறப்பித்தார்.
வீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்த வட்டாட்சியர் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
அரசின் இந்த ஆணையையும் சுற்றுச்சுவரில் ஒட்டிச் சென்றனர். இதனை அலட்சியப்படுத்தி மடத்தின் நிர்வாகிகள் சுற்றுச்சுவரில் ஒட்டியிருந்த ஆணையை தங்களின் பணியாளர்களைக் கொண்டு கிழித்து எறிந்தனர். வட்டாட்சியரின் ஆணை கிழிக்கப்பட்டு இருப்பதை அறிந்தும், வருவாய்த் துறையினர் சம்பந்தபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.