திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் கிராமத்தில் மின்சார அலுவலகம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டுள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வார்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச்சென்றனர்.
இதையடுத்து அங்குள்ள மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். காலை நேர பனியில் வெட்ட வெளியில் வீசப்பட்டதால் குளிர்ந்த நிலையில் இருந்த குழந்தையின் உடல் வெப்பத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரசவ வார்டில் இருந்த பெண் ஒருவர் மூலம் அந்த குழந்தைக்கு உடனடியாக தாய்பால் கொடுக்கப்பட்டது.
மேலும் குழந்தைகள் நலக் காப்பகத்திற்கும், காவல்துறைக்கும் மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று (ஜன.31) போலியோ தடுப்பு தினம் என்பதால் குழந்தைக்கு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. சிகிச்சையை தொடர்ந்து குழந்தைகள் நலக் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் குழந்தையின் பெற்றோர் யார், பெண் குழந்தை என்பதால் யாராவது அந்தக் குழந்தையை கால்வாயில் வீசி சென்றனரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் பொன்னேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...கடும் குளிரில் பச்சிளம் குழந்தையுடன் அவதிப்படும் இளம்பெண் - கெலமங்கலம் சுகாதார நிலையத்தை புதுப்பிக்குமா அரசு?