திருவள்ளூர்: சென்னை பெரம்பூர் அடுத்த செம்பியம் பகுதியைச் சேர்ந்த பிரபல கானா பாடகர் சரவணன் என்கிற சரவெடி சரண். இவரின், 'டோனி ராக் எ போட்டி கானா' என்ற பெயரிலான காணொலி 2020 மார்ச் மாதம் வெளியாகியிருக்கிறது. அதில் சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள் பாடல் பாடுகின்றனர்.
சரவெடி சரண் பாடும் பாடலில் உள்ள வரிகள், சிறுமிகளை ஆபாசமாகச் சித்தரிக்கிறது.
சென்னையில் கைது
அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அந்த பாடலை பார்த்துள்ளார். அவர், பாடலை பாடிய சரண் மீது நடவடிக்கை எடுக்க சைபர்கிரைம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின் பேரில் கானா பாடகர் சரவெடி சரணை சைபர்கிரைம் காவல்துறையினர் சென்னையில் கைது செய்து திருவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாகச் சித்தரிக்கும் காணொலி பரப்புவதால் அவர் மீது 67-பி தொழில்நுட்ப பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
எஸ்.பியின் எச்சரிக்கை
அதன்பின்னர், அவரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை மேற்கொண்ட பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கி எச்சரித்தார். மேலும், சரணிடம் மன்னிப்பு கடிதம் பெற்று காவல் நிலைய பிணையில் அவரை விடுவித்தார்.
தான் பாடிய பாடல் யார் மனதும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், கானா பாடகர் சரவெடி சரண் வெளியிட்டுள்ள புதிய காணொலி பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், போக்சோ சட்டத்தின் ௧௬ஆவது பிரிவின்கீழ் சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடக்கத் தூண்டுபவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம் என மாவட்ட எஸ்.பி. வருண் குமார் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: பூந்தியும், வாந்தியும்... கானா பாடகரின் ஆபாச பாடல்: பொதுமக்கள் கண்டனம்