சென்னை: சென்னையின் மெட்ரோ ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திலிருந்து (Poondi reservoir) இன்று வரை சுமார் 5 டி.எம்.சி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஏரிக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியை தொட்டுள்ளதால் 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
2 மாதங்களுக்கு முன்பே கொள்ளளவை எட்டிய ஏரி
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பூண்டி ஏரி நிரம்பி வரும் தருவாயில் இருந்தது. இந்நிலையில், பருவமழை தொடங்கியதையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது.
பூண்டி ஏரிக்கு போதுமான கிருஷ்ணா நதிநீர் கிடைத்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஏரியின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது.
5 டி.எம்.சி உபரி நீர் வெளியேற்றம்
அதனைத் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுப்பணித்துறை அலுவலர்கள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரி நீரை வெளியேற்றினர். பொதுப்பணி துறை, செயற்பொறியாளர், கொசஸ்தலையாறு பிரிவு, தொலைபேசி வாயிலாக நிமிடம் கூறுகையில், "மற்ற மெட்ரோ ஏரிகளின் நீர் வரத்தை விட பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஏறக்குறைய 5 டி.எம்.சி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. வழக்கமாக பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.
ஆனால் இந்த வருடம் மற்ற ஏரிகளில் நீர் இருப்பு போதுமானதாக உள்ளதால் உபரி நீர் கொசஸ்தலையாறு வழியாக வெளியேற்றப்பட்டு எண்ணூர் வழியாக கடலுக்கு செல்கிறது" என கூறிய அவர் மெட்ரோ ஏரிகளில் பூண்டி ஏரியில் மட்டும்தான் அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது.
மேலும் செம்பரம்பாக்கம் மற்றும் ரெட் ஹில்ஸ் ஏரிகளில் தலா 1.5 டி.எம்.சி உபரி நீர் இதுவரை வெளியேற்றப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார். மெட்ரோ ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 11,757 டி.எம்.சி ஆகும். இதில் இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 9.856 டி.எம்.சி ஆக உள்ளது. தொடர் மழையால் அனைத்து ஏரிகளிலும் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் உபரி நீரை அதிகமான அளவில் வரும் நாட்களில் திறந்து விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உபரி நீரை தேக்கி வைப்பதற்கு போதுமான கட்டமைப்பு வேண்டும் என்பதே நீரியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க:35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை