திருவள்ளூர்: கூனங்குப்பம் மீனவர் கிராமத்திற்கும், பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் ஆண்டிக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம், கோட்டைக்குப்பம் உள்ளிட்ட 12 கிராம மீனவர்களுக்கும் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் எல்லை தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இதுகுறித்து அண்மையில் மாவட்ட ஆட்சியர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட எல்லையில் மீன்பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும்போது எல்லைத் தகராறு தொடர்பாக, கூனங்குப்பம் மீனவர்கள் தாக்கியதில் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் ஏழு பேர் காயமடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் அளித்த புகாரின் பேரில், கூனங்குப்பம் மீனவர்கள் 64 பேர் மற்றும் பலர் மீது திருப்பாலைவனம் காவல் துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
நேற்று மோதல் தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி, 12 கிராம மீனவ கூட்டமைப்பினர் பழவேற்காடு பஜாரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையினர், காவல் துறையினர் தொடர்ந்து மீனவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: Video: வளர்ப்புப் பூனையை கவ்விச் செல்லும் 2 சிறுத்தைகள்