திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொன்னேரி மீன்வளக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி மாணவர்கள் கன்னியாகுமரியில் புதியதாக சுயநிதி மீன்வளக் கல்லூரி தொடங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும், 11 மாணவர்களை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஒன்பதாம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மூன்றாவது நாள் போராட்டத்தில் மாணவர்கள் மண்டியிட்டு தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். கல்லூரிக்குக் காலவரையற்ற விடுமுறை அளித்து விடுதி, கேன்டீன் ஆகியவற்றை நிர்வாகம் மூடிவிட்டது. எனினும் மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற மறுத்துத் தாங்களாகவே வெளியிலிருந்து உணவை வாங்கி வந்து சாப்பிட்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கல்லூரியை விட்டு வெளியேற முடியாது எனக்கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நாகையில் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் பிரதிநிதிகள் துணைவேந்தர் நடத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு வரும்.