திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ளது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை இதன் அருகில் ஆற்காடு குப்பம் கொசஸ்தலை ஆற்று மேம்பாலம் உள்ளது. கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (60) என்ற பெரியவர் மாடு மேய்க்கச் சென்றார். திடீரென்று ஆற்றில் அதிகளவு வெள்ள நீர் வந்தது. இதில், ஆற்றுக்கு நடுவில் ஏழு மாடுகள் சிக்கிக்கொண்டன.
இதனைக்கண்ட விஸ்வநாதன் அந்த மாடுகளை வெளியேற்ற முயற்சி செய்தார். ஆனால் இவரும் ஆற்றுநீரின் நடுவில் மாட்டிக்கொண்டார், உடனடியாக அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் திருத்தணி தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கொடுத்தனர். திருத்தணி தீயணைப்புப்படை வீரர்கள் விஸ்வநாதனை போராடி மீட்டனர்.
ஆனால் ஆற்றில் அதிக அளவு நீர் சென்றுகொண்டிருப்பதால் மாடுகள் மிரண்டுபோய் நடுவில் சிக்கிக்கொண்டுள்ள மாடுகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீர் குறைந்தால் மட்டுமே மாடுகள் வெளியே வரும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாடுகளை மீட்கும் பணி தொடர்ந்துவருகிறது.
இதையும் படிங்க: ’ஆங்கில அறிவு போதவில்லை, சரியாக மொழிப்பெயர்த்து படியுங்கள்’ - பாஜகவுக்கு சல்மான் குர்ஷித் பதிலடி