தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, எல்லாபுரம் உள்ளிட்ட 14 ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல் பிற்பகலில் மந்தமானது. மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக சார்பில் முன்னாள் சேர்மன் சரஸ்வதி சந்திரசேகர் தனது கைக்குழந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய வந்த காங்கிரஸ் வேட்பாளர் சசிகுமார் கூறுகையில், ”கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மக்களை நம்பி வெங்கத்தூர் ஊராட்சி 21ஆவது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால், மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்” என்றார்.