திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (30). இவர் மீது கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு மாதவன் தைல மரக் காட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த ஒன்றரை வருடம் முன்பு மாதவன் ரயில் நிலையத்தில் மூன்று பேரை வெட்டிக் கொலை செய்தார். இதனால், பாதிக்கப்பட்டவர்களால் மாதவன் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக காவல் துறையினர் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து, கடந்த ஒன்றரை வருடம் முன்பு கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் ஒருவரான ஆகாஷ் என்பவருடைய தந்தை ரமேஷ், உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து நான்கு நாள்களாக விசாரணை நடத்தினர். விசாரணையில், தன் மகனை கொலைசெய்த காரணத்தினால் பழிக்குப் பழி வாங்குவதற்காக மாதவனை கொலை செய்ததாக ஆகாஷின் தந்தை ரமேஷ் ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, ரமேஷ் (46), சங்கர் (18), 16 வயதுடைய இருவர் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதில் 16 வயதுக்குட்பட்ட இருவரை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.