திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சீனில் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்(103). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு, எத்திராஜ், சீனிவாசன் என்ற 2 மகன்களும், செண்பகவல்லி, நிர்மலாதேவி, காமாட்சி, கெஜலட்சுமி, தெய்வநாயகி என்ற ஐந்து மகள்களும் உள்ளனர்.
பரசுராமனுக்கு சொந்தமாக சென்னீர்குப்பத்தில் உள்ள 300 சென்ட் நிலத்தை ஐந்து மகள்களுக்கும் 300 சதுர அடி வீதமும், மீதமுள்ள சொத்தை மகன்கள் பெயரிலும் கடந்த 2008ஆம் ஆண்டு முறைப்படி பத்திர பதிவு செய்துள்ளார்.
சகோதரிகள் பெயரில் எழுதப்பட்ட சொத்தை போலி ஆவணங்கள் மூலம் 2011ஆம் ஆண்டு எத்திராஜ், சீனிவாசன் தங்களது பெயர்களில் எழுதிக்கொண்டனர்.
இதனையறியாத, பரசுராமன் கடந்த 2017ஆம் ஆண்டு மகள்கள் பெயரில் எழுதி வைத்த சொத்துக்கான பட்டா வாங்குவதற்காக சென்று பார்த்தபோது அனைத்து சொத்துக்களும் மகன்கள் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து மகன்களிடம் கேட்டபோது, தாய், தந்தை என்றும் பாராமல் வீட்டைவிட்டு அவர்களை துரத்தி உள்ளனர். அதே பகுதியில் உள்ள மகள் வீட்டில் தாய் தந்தை இருவரும் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு பரசுராமனின் மனைவி இறந்துவிட இவர் மட்டும் தற்போது மகள் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மகள் பெயரில் எழுதி வைத்த ரூ. 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி ஆவணம் மூலம் தங்கள் பெயரில் எழுதிக் கொண்ட மகன்களிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தருமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் பரசுராமன் மற்றும் அவர்களது மகள்கள் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: தந்தையின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி மகள்கள் ஆர்ப்பாட்டம்