திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் சம்பா சாகுபடியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது அறுவடைக்குத் தயாராகி வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதில் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருக்கொட்டாரம், வேலங்குடி, குமாரமங்கலம், மாத்தூர், கமுகக்குடி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் நெல் பழங்கள் தாக்கம் அதிகம் காணப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
நெல் பழ நோய் அதிகம் காணப்படுவதால் நெற்பயிர்களின் எடை குறைந்து, மகசூல் இழப்பு அதிகம் ஏற்படும் என விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதனைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாரபட்சமின்றி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சின்ன வெங்காயத்தில் புதிய வகை நோய் தாக்குதல்!