நிவர் புயல் தொடர் மழை காரணமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதனடிப்படையில் புழல் ஏரியிலிருந்து கடந்த மாதம் 4ஆம் தேதி 500 கனஅடியாக திறக்கப்பட்டு 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 7ஆம் தேதி புழல் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
தற்போது மழையின் காரணமாக புழல் ஏரியின் 21.20 அடியில் 20.97 அடி நிரம்பி உள்ளது. அதாவது புழல் ஏரியின் முழுக் கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் 3,238 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மேலும் இந்த ஏரிக்கு நீர்வரத்து 1,600 கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது. அதிகாலை முதலே மழை தொடர்ந்து பெய்துவரும் காரணத்தாலும் தற்போது இந்தப் புழல் ஏரியிலிருந்து 500 கனஅடி நீர் மீண்டும் திறக்கப்பட்டுவருகிறது. இந்த ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது கிரண்ட்லைன் வடகரை வடபெரும்பாக்கம், சாத்தாங்காடு, எண்ணூர் வழியாகச் சென்று வங்கக்கடலில் கலக்கும்.
மேலும் புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் யாரும் தண்ணீரை வேடிக்கை பார்க்கவோ குளிப்பது துணி துவைக்கவும் செல்ஃபி எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜன. 03) நள்ளிரவு முதல் பெய்துவரும் தொடர் மழையால் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதையொட்டி ஏற்கனவே திறந்துவிடப்பட்டிருந்த வினாடிக்கு 400 கனஅடி வீதத்தில் இருந்து 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் முக்கிய ஆதார ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. நிவர் புயல் காரணமாக பூண்டி செம்பரம்பாக்கம் செங்குன்றம் சோழவரம் ஆகிய ஏரிகளும் நிரம்பியதையொட்டி உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 03) இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் பூண்டி ஏரி மொத்த கொள்ளளவான 3,230 என்ற முழுக் கொள்ளளவை எட்டியதையொட்டி நேற்று (ஜன. 04) காலை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் மழை நீடித்தால் கூடுதலாக உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.