பூந்தமல்லியில் அமைந்துள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது.
இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அன்றைய தினத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களிடம் சோதனை நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி நகராட்சியில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கை கடைபிடிக்காமல் கடைகளை திறந்து வியாபாரம் செய்துவருபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதையும் பார்க்க: 'மின்சாரச் சட்டத்திருத்தம் - 2020... மாநில இறையாண்மைக்கு எதிரானது'