திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பெருஞ்சேரி கிராமத்தில் விவசாய நிலங்களில் வளர்ந்துள்ள தென்னை மரங்களில் காய்த்துள்ள இளநீரை அப்பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (19) என்பவர் இரும்புக் கம்பியால் செய்யப்பட்ட தொரட்டியை பயன்படுத்தி பறித்துள்ளார். அப்போது இளநீர் பறிக்கும் தொரட்டி அருகிலிருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் இருந்த கம்பியோடு உரசியதில் உடனடியாக மின்சாரம் தாக்கப்பட்டு நின்ற இடத்திலேயே தட்சணாமூர்த்தி எரிய ஆரம்பித்துள்ளார். இதனைக் கண்ட தட்சிணாமூர்த்தியின் பெரியப்பா விஸ்வநாதன் (50) தன் தம்பி மகனைக் காப்பாற்ற அவரைப் பிடித்துள்ளார். அவரையும் மின்சாரம் தாக்கியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.