திருவள்ளூர்: வரதட்சணைக் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணுக்கு நீதி வேண்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிச் செல்வன். மின்வாரிய ஊழியரான இவரது மகள் பத்மபிரியா (26) பட்டப்படிப்பை முடித்து தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இரண்டு மாதத்திற்கு முன்பு, பத்மபிரியாவுக்கு, சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சி கூடத்தில் காவலராக பணிபுரிந்து வரும் மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் (30) என்பவருடன் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது சீர் வரிசையாக பத்மபிரியாவின் பெற்றோர், 25 சவரன் நகை, குடும்பம் நடத்த தேவையான அனைத்து வீட்டு உபயோக பொருள்களும், காரும் வாங்கிக் கொடுத்துள்ளனர். இச்சூழலில், மேலும் வரதட்சணை கேட்டு கணவன் ராஜாராமும், அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பத்மபிரியா, தாய் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பாக பத்மபிரியா தன் கைப்பட எழுதிய கடிதத்தில், “தனது இந்த நிலைக்கு கணவர் ராஜாராமும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம்.
அவர்களால் தனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. தனது மரணத்திற்கு காரணமான அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் காவல் துறையினர் பத்மபிரியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பத்மபிரியாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.