திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் பதவிகளில் திமுக 6 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. துணைத்தலைவர் பதவிகளில் திமுக ஏழு இடங்களையும், அதிமுக, பாமக முறையே ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
திருவள்ளூர், பூந்தமல்லி, சோழவரம், புழல், வில்லிவாக்கம், மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றியக் குழு தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். வில்லிவாக்கத்தில் பாமக உறுப்பினர் ஞானப்பிரகாசம் என்பவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடம்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுஜாதா சுதாகர் என்பவர் துணைத்தலைவராக தேர்வாகியுள்ளார்.
கும்மிடிப்பூண்டி, பூண்டி எல்லாபுரம், கடம்பத்தூர் ஆகிய இடங்களில் அதிமுகவினர் ஒன்றியக் குழு தலைவர் பதவியை கைப்பற்றினர். பூண்டி ஒன்றியத்தில் துணைத்தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியதால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. இதனால், துணைத்தலைவர் பதவி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவாலங்காடு, திருத்தணி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் சரிசமமான அளவில் இருந்ததால் பிரச்னைகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து இந்த நான்கு ஒன்றியங்களிலும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.