திருவள்ளூர் தெற்கு மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த பானவேடு தோட்டம் ஊராட்சியில் மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமையில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதனிடையே, திமுக வார்டு செயலாளர் சேகரின் மகன் அன்பு, விபத்தில் காயம் அடைந்துள்ளதால் அவரது மருத்துவ செலவுக்கு உதயநிதி ரூ.10 ஆயிரம் வழங்கினார். கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுகவின் மீது நம்பிக்கை வைத்து இந்த கூட்டத்திற்கு வந்துள்ளீர்கள். இது பேசிவிட்டு செல்லக்கூடிய கூட்டம் அல்ல மிக விரைவில் ஆட்சி மாற்றம் வரும். ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் உட்காருவார் என்றும் கட்சியினரிடையே நம்பிக்கை அளித்தார்.
பின்னர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தங்களின் குறைகளை கூற தொடங்கினர். இதில் முதலில் பேசிய பெண் தனது பெயரை சசிகலா என்று கூறிய உடன் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அப்போது பேசிய உதயநிதி, "சசிகலா என்ற பெயர் வைத்துள்ள உங்களுக்கே குறையா?" என்று சிரித்தபடி கூறியதும், பொதுமக்களும் கட்சியினரும் சேர்ந்து சிரித்தனர். இதில் பாரிவாக்கம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டம், முதியோர் உதவி தொகை, ரேசன் கடையில் முறையாக பொருட்கள் வழங்கவில்லை என்று பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
திமுக மக்களின் கட்சியா அல்லது வாரிசுகளை உருவாக்கும் அரசியல் கட்சியா என்று அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அரசல் புரசலாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சசிகலா பேரை சொல்லி கிண்டலாக உதயநிதி பேசியது சர்ச்சையாகி உள்ளது.