திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் 20க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். விபத்து, பிரசவம், உடல்நலக் குறைவு என பல்வேறு தரப்பினருக்காகவும் 108 ஆம்புலன்ஸ் சேவை மிகவும் அத்தியாவசியமாகியுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து நோயாளிகளை திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கும், பின்பு திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு கொண்டுச் செல்வதில் இவர்களின் பங்கு அதிகளவு உள்ளது.
எனவே அவர்களது சேவையை பாராட்டும் வகையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஏற்பாட்டில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 7740 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாராயம் காய்ச்சுபவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன'', என்றார்.
இதையும் படிங்க: மருத்துவர் உடல் அடக்க சர்ச்சை விவகாரம்; திமுகவினருக்கு வலைவீச்சு