திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 620-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காவலர் ஒருவர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு, அக்காவலர்கள் கிராமங்களில் சந்திக்கும் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உங்கள் கிராம விழிப்புணர்வுக் காவலராக நியமிக்கப்பட்டவர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இனி சமூக குற்றங்கள் குறையும்
அப்போது, அவரவர் பணிபுரியும் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், அதை எவ்வாறு தீர்த்தார்கள் என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர். அதனையடுத்து நிகழ்வில் பேசிய மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன், ’இந்த அமைப்பு சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில் தேர்தல் நேரத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சின்ன சின்ன நிகழ்வாக இருந்தாலும் அதனை மாவட்ட காவல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டால் அதன்மூலம் மற்றவர்களும் இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்’ என்றார்.
கிராம விழிப்புணர்வு காவலர் அமைப்பு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், ’கிராம விழிப்புணர்வு காவலர் என்ற அமைப்பு மூலம் கிராமப்புறங்களில் நிகழும் சில பிரச்சினைகளை நேரடியாகப் பேசித் தீர்த்துவைக்க முடியும்.
குற்ற வழக்கு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, தற்கொலை போன்ற வழக்குகளைக் குறைக்க, இந்த அமைப்பில் உள்ள காவலர் சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்வார். அந்தக் கிராமத்தை அவர் தத்தெடுத்தது போலத்தான் இவை நடைபெறும்’ என்றார்.
காவலர்களுக்கான வாட்ஸ்அப் குழு
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சித் தலைவர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்களை இணைத்து ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்க வேண்டும். அதன்மூலம் அங்கு நிலவும் எவ்விதப் பிரச்சினையாக இருந்தாலும் உடனுக்குடன் தெரியவரும்.
அந்தக் குழுவில் பிரச்சினைகளைப் பதிவிடும்போது காவல் நிலையங்களை நாடாதபடி நேரடியாக அவற்றைத் தீர்க்க முடியும் என்றும் எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திடீரென வெடித்த செல்போன் பேட்டரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!