திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியைச்சேர்ந்தவர், தனஞ்செழியன்.இவரது மகன் முருகேசன்(வயது 38). கூலித்தொழிலாளியாக வேலை செய்துவருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம்(நவ-6) முருகேசன் வேப்பம்பட்டு அண்ணா நகர் முதல் தெருவைச்சேர்ந்த தனது நண்பரான தேவா (வயது 53) என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்துகொண்டு திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அயத்தூர் டன்லப் நகர் சாலையில் இருவரும் வந்துகொண்டிருந்தபோது பின்னாள் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த கத்தியால் முருகேசனை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட தொழிலாளி முருகேசன் உடலை மீட்டு செவ்வாய்பேட்டை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அண்ணா நகரைச்சேர்ந்த சரவணன் (22), அவரது நண்பர்களான பார்த்திபன் ( 23), வினோத் ( 20) ஆகிய 3 பேரை செவ்வாய்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
இரண்டு ஆண்டுகளாக முன்விரோதம்: காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரவணன் அளித்த வாக்குமூலத்தில் கூறியாதவாது, ‘கடந்த 2020ஆம் ஆண்டில் வேப்பம்பட்டு பகுதியில் எனது நண்பர்கள் பார்த்திபன், வினோத் ஆகியோருடன் சூப் சாப்பிடச்சென்றோம். அப்போது அங்கிருந்த முருகேசனுக்கும் எங்களுக்கும் இடையே சூப் வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கை கலகலப்பில் முடிந்தது.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டோம். அதைத்தொடர்ந்து முருகேசன் திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச்சென்று தங்கினார். தற்போது கடந்த 20 நாட்களுக்கு முன்னர் மீண்டும் அவர் வேப்பம்பட்டிற்கு வந்தார்.
அவரைக் கண்டவுடன் எனக்கு அவர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. இது தொடர்பாக நான் எனது நண்பர்களான பார்த்திபன், வினோத்திடம் கூறி முருகேசனை எப்படியாவது பழிக்குப் பழி வாங்க வேண்டும் எனத் தெரிவித்து திட்டம் தீட்டினோம். அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முருகேசன் மோட்டார் சைக்கிளில் சென்றதை நோட்டமிட்டு நாங்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளைப் பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றோம். இருப்பினும் காவல்துறையினர் எங்களை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்' என அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சரவணன், பார்த்திபன், வினோத் ஆகிய 3 பேரையும் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி!