திருவள்ளூர்: நகராட்சி 27 வார்டுகளுக்கான தேர்தல் பரப்புரையை, திருவள்ளூர் தேரடிப்பகுதியில் திண்டுக்கல் லியோனி தொடங்கிவைத்தார். திருவள்ளூர் நகராட்சி 27ஆவது வார்டு திமுக, கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து தேரடி, பஜார் வீதி, எம்ஜிஆர் சிலை, ரோஸ் மஹால், ஆயில் மில், டி.இ.எல்.சி. சர்ச், துளசி திரையரங்கம் ஆகிய இடங்களில் திண்டுக்கல் லியோனி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்பொழுது, ”பாஜகவினரின் வேல், கம்பு அரசியலை மக்கள் விரும்பவில்லை. அதிமுகவும் பாஜகவும் மக்களால் இந்தத் தேர்தலில் அநாதையாக விடப்படுவார்கள். 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை திமுக தலைவர் பெற்றுத் தந்தார்.
தற்பொழுது இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. அதிக அளவிலான பெண்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, பெண்களின் பேராதரவுடன் திமுக வெற்றிபெறும்” எனப் பரப்புரை கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்.
மேலும், பரப்புரையின்போது 10ஆவது வார்டு திமுக வேட்பாளர் பாபுவை அறிமுகப்படுத்தும்போது, அழகான வேட்பாளராகத் திகழ்வதாகவும் கூடுதலாக தாடி வைத்தால் சினிமாவில் வில்லன்போல காட்சி அளிப்பார் எனவும் திண்டுக்கல் லியோனி பேசியதையடுத்து கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
இதையும் படிங்க: கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும் - காவல் துறையினருக்கு எடப்பாடி எச்சரிக்கை!