திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பார் உரிமையாளர் நெல்லையப்பன் காவல் துறை அலுவலர்கள் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி, கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாமல்லபுரம் காவல் இணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில் மாமல்லபுரம் காவல் இணை கண்காணிப்பாளர் சுப்புராஜ், திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி ஆகியோர் அதிமுக பிரமுகர் ஆனந்திற்கு லஞ்சப் பணம் கொடுத்திருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் பார் ஓனர் நெல்லையப்பனிடம் லஞ்சம் பெற்றதாக காவல் துறை அலுவலர்கள் மேல் வழக்குப்பதிவு செய்தனர். இதில், தொடர்புடைய கூடுதல் காவல் இணை கண்காணிப்பாளர் மாணிக்கவேல், காவல் இணை கண்காணிப்பாளர் சுப்புராஜ், ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட சுமார் 15 காவல் துறை அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் முக்கிய பல ஆவணங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறை டிஜிபி திரிபாதி இந்த வழக்கில் தொடர்புடைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாணிக்கவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் சில அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.