இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் 41 பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் 82,000 தொழிலாளர்களும், 40,000 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி தனியார் மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த முடிவை அமல்படுத்துவதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்க இருக்கிறது. இதனை எதிர்த்து பல்வேறு பாதுகாப்புத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று படைத்துறை உடை தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, இன்ஜின் பேக்டரி உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் திருவள்ளூர் ஆவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஊழியர்களின் குடும்பத்தினர் உட்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.