கோவிட்-19 இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1,200 முதல் 1,500 வரை பாதிப்பு பதிவாகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்து வரும் சூழலில், அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒன்பது தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நீக்கி, சீராக மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகம் நூறு படுக்கைகளை அரசுக்கு வழங்க முன்வந்துள்ளது.
மேலும், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ஒரு தனியார் நிறுவனமும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்ய முன்வந்துள்ளது. இதை வரவேற்றுள்ள அரசு இத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.