தமிழ்நாடு மக்கள் கரோனா வைரஸ் தொற்றை கண்டு அஞ்சத் தேவையில்லை என்றும், வருமுன் காப்போம் என்ற அம்மாவின் திட்டம் மூலம் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என திருத்தணி அருகே நடைபெற்ற ஆய்வுக்குப்பின் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவின் பெயரில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி இன்று தமிழ்நாடு - ஆந்திர எல்லையான திருத்தணியை அடுத்த பொன்பாடி பகுதியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஜெகநாதன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் அதிகாரிகள் பொன்பாடி சோதனைச் சாவடியில் ஆந்திராவிலிருந்து வரும் வாகனத்திற்கு கிருமிநாசினி தெளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார், “கரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றும் தமிழகத்தில் உள்ள 59 ஆயிரத்து 439 பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதாகவும், 2319 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.
மருத்துவம் சார்ந்த பல்கலைக்கழகங்கள் மட்டும் இயங்கி வருகிறது என்றும் 52 ஆயிரத்து 966 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருக்கின்றது என்றும், 1439 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யப்பட்டு உள்ளது என்றும், கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக வழிபட இந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு தனிமைப்படுத்தப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், பெரிய ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது” என்றார்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேட்டுக்கொண்டார்.