தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 5) ஒரே நாளில் மட்டும் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி, திருத்தணி, திருநின்றவூர் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 209 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.
இதனையடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் 4,806ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று (ஜூலை 5) ஒரே நாளில் மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 3062 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் கம்புகளால் அடைக்கப்பட்டும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், வீட்டில் உள்ளவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை கைகளை கழுவ வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.