திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டனர். அதேநேரத்தில் தேவையில்லாமல் இளைஞர்களின் பட்டாளமும் வாகனங்களில் பயணித்ததால் கரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டது. நான்கு ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் கூடியதால் வியாபாரிகளால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதைக்கண்ட பழவேற்காடு, கோட்டை குப்பம், லைட் ஹவுஸ், தாங்கள், பெருங்குளம் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து அவசரக் கூட்டம் கூட்டினர். பின்னர் இது குறித்து உடனடியாக பொதுமக்களிடையே வாகன பரப்புரை செய்யப்பட்டது. அப்போது, வியாபாரிகள் இடத்தில் நேரடியாக சென்று வரிசையில் நின்று பொதுமக்கள் பொருட்களை எப்படி வாங்கிச் செல்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
பழவேற்காடு வியாபாரிகள் நல சங்க தலைவர் சேகர், வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்ய அறிவுறுத்தினார். இதனையடுத்து பொதுமக்கள் இடைவெளி விட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: அரியலூர் காந்தி மார்கெட் இடமாற்றம் - வியாபாரிகள் அதிருப்தி