திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் M.P தலைமையில் தெற்கு, வடக்கு, மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், ”1658 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை நரேந்நிர மோடி புழக்கத்திலிருந்து எடுத்தார். அதைப் பார்த்து சகிக்க முடியாமல் பேசத் தொடங்கினார் ப.சிதம்பரம் நீங்கள் நாட்டை ஏமாற்றிவிட்டீர்கள், நீங்கள் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார ஊழலை செய்திருக்கிறீர்கள் என்றும் அதன் மதிப்பு எவ்வளவு என்றால் 15.77லட்சம் கோடி ரூபாய் வரை இந்தியாவில் ஊழல் நடைபெற்றுள்ளது. தயவு செய்து உண்மையைக் கூறுங்கள் நான் இந்த நாட்டின் நிதி அமைச்சராக இருந்தவர் எனவே இந்த 2326 கோடி லட்சம் கோடி தாள்களை நீங்கள் அச்சிட 3 அச்சிடும் இயந்திரம்தான் இந்தியாவில் உள்ளது. அதைக்கொண்டு 24 மணிநேரமும் அந்த 3 தொழிற்சாலையும் வேலை செய்தால்கூட அச்சிட 10 மாதங்கள் ஆகும் என சொன்னவர் ப. சிதம்பரம். ப. சிதம்பரம் விவகாரத்தில் நீதிபதிகள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ”நாடு திவால் ஆகிக்கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதி இருந்தது. ப சிதம்பரத்தால் உருவாக்கப்பட்ட நிதி அது. அதை அவர் சிக்கனமாக வைத்திருந்தார். உபரி நிதி மூன்று காரணங்களுக்காகத்தான் செலவிடப்படும். ஒன்று நாட்டில் பஞ்சம் வந்தால் செலவிடப்படும், நாட்டில் யுத்தம் வந்தால் செலவிடப்படும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் அதனுடைய மதிப்பு அதிகமாகப் போனால் அப்போது அந்தப் பணத்தை மார்க்கெட்டில் சமப்படுத்துவார்கள். இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் உபரி நிதி செலவிடப்படும். ஆனால் அன்றாட செலவுகளுக்காக இவர்கள் எடுத்திருக்கிறார்கள். இதனால் நாடு விரைவில் திவால் ஆகும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒரே நாடு, ஒரே மொழி என்கிற முழக்கத்தை அமித் ஷா முன் வைத்திருக்கிறார். அது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதைப் போல தோன்றும். ஆனால் இந்தியா என்பது ஒரு தேசம் அதனுள் 29 மாநிலங்கள் இருக்கின்றன. 7 துணை மாநிலங்கள் இருக்கின்றன. எனவே இந்தியாவில் இருக்கின்ற 29 மாநிலங்களும் ஒன்றாக முடியாது. தேசம் என்பது வேறு, நாடு என்பது வேறு. இந்தி பரவலாக பேசக்கூடிய மொழியாக இருக்கலாமே ஒழிய எல்லோரும் பேசக்கூடிய மொழி அல்ல” என்றார்.