உத்தரப் பிரதேசத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடிவரும் உழவர் மீது ஒன்றிய உள் துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மகன் ஆசிஸ் மிஸ்ராவுடன் சென்ற பாஜவைச் சேர்ந்தவர்கள் காரை ஏற்றினர். இதில் ஏற்பட்ட வன்முறையில் நான்கு உழவர், ஒரு உழவர், பாஜகவினர் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும் உயிரிழந்த உழவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்திற்குச் சென்றார். அங்கு அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் நேதாஜி சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் தலைமை வகித்தார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவர் லயன் ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் ஜெயக்குமார் பேசும்போது, "நாட்டின் முதுகெலும்பாக உள்ள உழவரை அழைத்துப் பேசாமல் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் அவர்களை ஏற்றிக்கொலை செய்வது உள்ளிட்ட படுபாதக செயல்களைச் செய்துவருகிறது ஒன்றிய அரசு.
இந்த அரசைக் கண்டித்தும் விபத்துக்கு காரணமானவர்களைக் கைதுசெய்யாமல் ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தியைக் கைதுசெய்த உத்தரப் பிரதேச காவல் துறையையும், யோகி அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காங்கிரஸ் பேரியக்கம் பலமான கட்சியாக உருவெடுத்து மீண்டும் இதுபோன்ற ஒரு கொடுங்கோல் ஆட்சி வராமல் மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை - நீதி கேட்டு சித்து உண்ணாவிரதம்